வருகை தந்தமைக்கு நன்றி..

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சிறந்த நூறுகளை ஜெயலலிதா பெற வேண்டும் எம்.எல்.ஏ., சரத்குமார் பேச்சு.

                                                                 

                                    சிறந்த நூறுகளை ஜெயலலிதா பெற வேண்டும்
                                                       எம்.எல்.ஏ., சரத்குமார் பேச்சு.
  


  தமிழக   சட்டசபையில் ச.ம.க.தலைவர்  தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசியதாவது:

மழை பெய்யாவிட்டால் பூமியில் புல், பூண்டு கூட முளைக்காது என்பது வள்ளுவன் சொல். அதேபோல ஒரு நாட்டில் நல்லாட்சி என்ற மழை பெய்யாவிட்டால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

தமிழகத்தில் மூன்று மாதங்களுக்கு முன் 203 இடங்களில் கனமழை பெய்ததால் சிறப்பான ஆட்சி அமைந்து வறண்டு போயிருந்த, இருண்டு போயிருந்த தமிழகம் முதல்வர் ஜெயலலிதாவால் மீட்கப்பட்டுவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழகத்தில் 234 இடங்களிலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று மதுரை வானிலை அறிக்கை சொன்னது பொய்யாகி, மக்கள் வானிலை அறிக்கை இன்று உண்மையாகி விட்டது.

இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் நல்லாட்சி 100 நாட்களை எட்டி விட்டது. எந்த துறையிலும் 100க்கு 100 வாங்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாக இருக்கும்.

முதல்வர் இதுபோன்ற சிறந்த நூறுகளை பலமுறை பார்த்தவர். தற்போது மூன்றாவது முறையாக பார்க்கின்ற 100வது நாள். மூன்றாவது முறையாக முதல்வருக்கு தமிழக மக்கள் அளித்த பெரும் வெற்றியை இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டுகிறது.

பல முக்கிய தலைவர்கள், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் முதல்வர் பதவியேற்ற நாளில் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வரோடு 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். முதல்வர் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திலேயே ஏழு சிறப்பு வாய்ந்த சலுகைகளை அறிவித்து இந்திய அரசியலில் மாபெரும் சாதனைகளை படைத்துள்ளார்.

பொது வினியோக திட்டத்தில் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி. சுமார் 24 லட்சம் முதியோர்களுக்கு, ஆதரவற்றோருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயாக உயர்வு. ஏழை பெண்களின் திருமணத்திற்காக 25 ஆயிரம் ரூபாயுடன் 4 கிராம் தங்கம். பட்டம் பெற்ற பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி. மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவி தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்வு போன்றவை அற்றில் முக்கியமானவை.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்ற தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையையும், அதற்கான அமைச்சரையும் நியமித்துள்ளது. நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பலருடைய நிலத்தை அபகரித்தனர்.

நிலத்தை இழந்தவர்கள் துடிதுடித்தார்கள், துவண்டார்கள். வன்முறை கும்பலுக்கு பயந்து வெளியே சொல்ல முடியாமல் தவித்தார்கள்.

மகாபாரதத்தில் பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரித்த போது அவளது மானங்காக்க பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வந்தது போல வீடு, மனையை இழந்தவர்களுக்கு அவற்றை மீட்டு தர முதல்வர் போலீசாருக்கு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

காவிரி வடிநில பகுதி விவசாயிகள் சாகுபடியை உரிய நேரத்தில் மேற்கொள்வதற்காக உரிய நாளுக்கு முன்னதாகவே மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரண்டாம் பசுமை புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை வாயிலாக உரிய காலத்தில் கடனை திரும்ப செலுத்துவோருக்கு வட்டியில்லா பயிர் கடனாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இரண்டாம் வெண்மை புரட்சி உருவாக்க வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட இருக்கிறது.

விவசாய கூலி தொழிலாளர்களின் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் கொடுக்கப்பட இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தொழில் வளம் பெருக்கப்படுகிறது. மக்களின் வீட்டிற்கே சென்று சுகாதார வசதியளிப்பதற்கு நடமாடும் மருத்துவமனை திட்டம் வரவேற்கத்தக்கது.

தொப்புள் கொடி உறவான ஈழ தமிழர்கள் வாழும் முகாம்களில் குடும்ப தலைவருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

திருப்பூர் சாய பட்டறை பிரச்னைக்கு தீர்வு காண சுமார் 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாகவும், 10 ஆயிரத்து 838 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 18 கோடியே 38 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இப்படி பல சாதனைகளை செய்து இந்த 100 நாட்களில் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார் முதல்வர்.

அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி போன்று சிறந்த ஆஸ்பத்திரியும், மருத்துவ கல்லூரியும் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது ஏழை, எளிய மக்கள் சிறப்பான மருத்துவம் பெற வேண்டும் என்ற முதல்வரின் உண்ணத நோக்கத்தை எடுத்து காட்டுகிறது.

ஈழத்தில் நமது சொந்தங்கள் அழிக்கப்பட்டதை உலக அரங்கிற்கு எடுத்து சொல்லும் வகையில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை மற்றும் ராஜபக்சே போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மாபெரும் சாதனையாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மைனாரிட்டி அரசு இழைத்த கொடுமைகளால் வேதனையுடனும், சோதனையுடனும் வெளியில் சொல்ல முடியாமல் தவித்த தமிழக மக்களுக்கு இருள் சூழ்ந்த தமிழகத்திற்கு மக்கள் மன்றம் அளித்த ஆட்சி என்னும் ஒளி விளக்கை ஏந்தி தமிழக மக்களின் இன்னல்களை களைய வந்த முதல்வரை நான் பார்க்கிறேன்.

சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக மீண்டும் அறிவித்து சட்டசபையில் சட்டத்தை தாக்கல் செய்து மன்ற ஒப்புதல் பெற்றது பாராட்டத்தக்கது.

பரிவு, பாசம், வீரம், விவேகம், அறிவு, ஆற்றல், திறமை கொண்ட முதல்வர் தலைமையில் இன்று 100 நாளை எட்டி இருக்கின்றோம். பல 100 ஆண்டுகள் இந்த சாதனைகள் தொடரும்” என எம்.எல்.ஏ.,சரத்குமார் பேசினார்.
Download As PDF

கருத்துகள் இல்லை: